தமிழ் இஸ்லாம் இணைய தளம்

இளம் பிறை அனாதைகள் அறக்கட்டளை

 கேள்வி பதில்; 

 

1 கேள்வி: நிய்யத்தை பல காலம் வாயால் மொழிந்து வருகிறோம். ஆனால் நீங்களோ மனதால்தான் நினைக்க வேண்டும் என்கிறீர்கள். ஏன் இந்த முரண்பாடு? ஹஜ் உம்ரா செய்யும்போது வாயால் மொழிவது நபிவழி. இதை வைத்துத்தான் ஒவ்வொரு குறிப்பிட்ட தொழுகைக்கும் நிய்யத் வைக்கிறோம். இதை மறுக்க வேண்டுமா? இப்னு கரீமா, சென்னை 

'நிய்யத்' என்ற அரபு பதத்திற்கு என்ன பொருள் என்று தெரியாததால்தான் இந்த சர்ச்சை எழுகிறது. 'மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு அரபியில் நிய்யத் என்று சொல்வர்'.  ஒரு நபிமொழியைப் பாருங்கள்:  'இன்னமல் அஃமாலு பின்னியாத்' (உமர் (ரலி) - புகாரி) 

எண்ணப்படியே செயல்கள் அமையும் என்பது இதன் நேரடிப் பொருள். எண்ணமில்லாமல் செயல்பட முடியாது. செயல்களுக்கான அடிப்படைக் காரணமே நமது எண்ணங்கள்தான. செயல்களுக்கும் வாயால் மொழிவதற்கும் எத்தகைய தொடர்பும் இல்லை. நமது நடைமுறை வாழ்க்கையில் இதற்கு ஏராளமான உதாரணங்கள் கூறலாம்.  நீங்கள் சென்னையிலிருந்து பாண்டி செல்லப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், பயணத்திற்குத் தயாரானதும் 'நான் இப்போது, இத்தனை மணிக்கு, இந்த பஸ்ஸில், இத்தனை கிலோ மீட்டரில் இருக்கக் கூடிய பாண்டிக்குச் செல்லப் போகிறேன்' என்று உங்களுக்கு நீங்களே வாயால் சொல்லிவிட்டுத்தான் செல்வீர்களா? 'தாகம் தீர்க்க நான் இப்போது தண்ணீர் குடிக்கப் போகின்றேன் என்றோ பசி தீர உணவு உண்கிறேன்' என்றோ 'மணைவியோடு இல்லறத்தில் ஈடுபடப் போகிறேன்' என்றோ எவரும் தமக்குத் தாமே வாயால் மொழிந்து விட்டு அச்செயலைச் செய்வதில்லை. ஆனாலும் அச்செயல்கள் நடக்கின்றன. எப்படி நடக்கின்றன? எண்ணங்களில் தோன்றியவுடன் செய்கிறோம். இதுதான் நிய்யத்.  நீங்கள் எடுத்துக் காட்டியதெல்லாம் உலக உதாரணங்கள்தானே, மார்க்க விஷயத்திற்கு இது பொருந்துமா? என்ற சந்தேகம் எழலாம். இது நியாயமான சந்தேகமில்லை. உலகவியலோ, வணக்கவியலோ ஒரு செயலை செய்ய உள்ளம்தான் தேவை. வாயால் மொழிவதல்ல.  ஸலாம் சொல்வதும், ஸலாத்திற்கு பதில் சொல்வதும் வணக்கம்தான். உங்களிடம் ஒருவர் ஸலாம் சொல்கிறார், உடனே நீங்கள் 'இன்னாருக்கு நான் பதில் ஸலாம் கூறப் போகிறேன்' என்று வாயால் சொல்லிவிட்டுத்தான் பதில் கூறுவீர்களா? பாங்கு சொன்னவுடன் பள்ளிவாசலுக்குக் கிளம்புகிறீர்கள் இதுவும் வணக்கம்தான். அப்போது 'நான் இப்போது பள்ளிக்கு தொழச் செல்கிறேன்' என்று வாயால் கூறிவிட்டுத்தான் கிளம்புவீர்களா? ஒரு பிச்சைக்காரர் வந்து கையேந்துகிறார் அவருக்குத் தர்மம் செய்வது வணக்கம். அவர் முன்னால் நின்றுகொண்டு 'நான் இந்த பிச்சைக்காரருக்கு இவ்வளவு பணத்தை பிச்சை போடுகிறேன்! என்று சொல்லிவிட்டுத்தான் போடுவீர்களா? 'இந்த வசனம் முதல் இந்த வசனம் வரை குர்ஆன் ஓதப் போகிறேன்' என்று கூறிவிட்டுத்தான் ஓதுவீர்களா? இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதற்கெல்லாம் வாயால் மொழிவது தேவையில்லை என்றால், தொழுகையில் மொழிந்துதான் ஆக வேண்டும் என்று அடம் பிடிப்பது ஏன்?  இத்தனை ரக்அத் தொழப் போகிறோம், இத்தனை வக்த் தொழப் போகிறோம், கஃபாவை முன்னோக்கி நிற்கிறோம். இவ்வனைத்தையும் மனதில் நினைத்து விடுகிறோம். இவ்வனைத்துக்குப் பிறகும் மனப்பாடம் செய்ததுபோல் ஒப்பித்துக் காட்டுவதுபோல் வாயால் மொழிவது அறிவுக்குப் பொருந்துகிறதா? என்று சிந்தியுங்கள்.  ஹஜ், உம்ராவிற்கு வாயால் மொழிவதை இதோடு ஒப்பிடக் கூடாது. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. 1. இரண்டும் வௌ;வேரான வணக்கங்கள். இரண்டுக்கும் உள்ள சட்டங்கள் தனி. ஹஜ், உம்ராவிற்கு இஹ்ராம் உடை அணிவதுபோல் தொழுகையிலும் அணிய வேண்டும் என்று ஒருவர் கூறினால் அதை ஏற்பீர்களா? நபி (ஸல்) அவர்களின் 11 வருட தொழுகையில் ஒரு தொழுகையிலும் அவர்கள் வாயால் நிய்யத்தை மொழிந்துவிட்டுத் தொழவில்லையே - இது எதைக் காட்டுகிறது. ஹஜ், உம்ரா நிய்யத்தை தொழுகையில் 'லிங்க' - தொடர்பு பண்ண நபி (ஸல்) அவர்கள் மறந்து விட்டார்களா? அல்லது அவர்களுக்குத் தெரியவில்லையா? பதில் சொல்ல முடியுமா!  2. ஹஜ், உம்ரா நிய்யத் என்றால் என்ன? 'லப்பைக்க ஹஜ்ஜன் வ உம்ரத்தன்' - ஹஜ், உம்ராவிற்காக உன்னிடம் வருகிறேன் என்பது இதன் பொருள். தல்பியாவின் மூலம் இது மீண்டும் மீண்டும் நினைவு கூறப் படுகின்றது. அகில உலக இஸ்லாமிய பெருமாநாட்டில் இப்படி முழங்குவதை இறைவன் விரும்புகிறான். இது ஹஜ்;, உம்ராவிற்குரிய சட்டம். இதைத் தொழுகையுடன் சேர்ப்பதோ, நோன்புடன் சேர்ப்பதோ அறிவார்ந்த செயல் அல்ல என்பதையும் நபி (ஸல்) அவர்கள் வெறுத்து எச்சரித்த 'பித்அத்' நிலையைச் சாரும் என்பதையும் நினைவில் வையுங்கள். 

 

2 கேள்வி: தக்பீர் சொல்லி கைகளை எங்கே கட்ட வேண்டும்? நெஞ்சில் கைகளைக் கட்ட என்ன ஆதாரம்? தொப்புழுக்குக் கீழ் கை வைக்கும் ஹதீஸ் பலவீனம் என்கிறீர்களா? காரணம் கூற முடியுமா? சுலைமான், மதுரை

 தொழுகை என்பது இறைவனால் மிக அதிகமாக விரும்பக்கூடிய ஒரு செயல். அந்த செயலை நம் விருப்பப்படியோ, யூகப்படியோ, சந்தேக நிலையிலோ அமைத்துக் கொள்ளக் கூடாது. 'என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்' என்பது நபிமொழி. மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி) மூலமாக இச்செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது. நபி (ஸல்) அவர்கள் தொழும் முறையை விளக்கக் கூடிய நபித் தோழரான வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் 'நபி (ஸல்) அவர்களுடன் நான் தொழுதேன், அவர்கள் தமது இடது கையின் மணிக்கட்டின் மீதும், முன் கை மீதும், குடங்கையின் மீதும் தமது வலது கையை வைத்தார்கள்' என அறிவிக்கிறார்கள். நூல்: நஸயி  இடது கையின் (முன்பகுதியில்) வலது கையை வைத்து நெஞ்சின் மீது வைத்ததை நான் பார்த்தேன் என அதே நபித் தோழர் வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஹம்பல் (ரஹ்) தொகுத்த அஹ்மத் என்னும் பெரும் ஹதீஸ் நூலில் ஐந்தாம் பாகத்தில் இச்செய்தி ஆதாரப் பூர்வமாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது. எனவே நெஞ்சில் கை கட்டுவதுதான் சுன்னத்.  தொப்புளுக்குக் கீழ் கை கட்டலாம் என்போர் கூறும் ஆதாரத்தின் நிலையைப் பாருங்கள்:  தொழுகையில் தொப்புளுக்குக் கீழ் கை வைக்க வேண்டும், அதுதான் சுன்னத் என்று அபூ-ஹுரைரா, அலீ ஆகிய இரு நபித்தோழர்கள்; பெயருடன் ஒரு ஹதீஸ் அபூதாவுத் என்ற நூலில் வருகிறது. ஹதீஸ்களின் அறிவிப்பாளர்களைப் பரிசீலிக்கும் பெரும் அறிஞர் குழுவினர் இச்செய்திபற்றி என்ன முடிவு செய்கிறார்கள் என்று பார்ப்போம்.  இந்த ஹதீஸை தமது நூலில் பதிவு செய்த அபூதாவுத் அவர்கள் இந்த செய்தி சரியானதல்ல என்கிறார்கள். காரணம் கூறும்போது, இந்த செய்தியை அறிவிக்கக் கூடியவர்களில் அப்துர்ரஹ்மான் இப்னு இஸ்ஹாக் அல்-கூபி என்பவர் இடம் பெறுகிறார். இவரது ஹதீஸ்கள் ஏற்கத்தக்கவை அல்ல என கூறுகிறார்கள். அஹ்மத் (ரஹ்) அவர்களும் இதைத்தான் கூறுகிறார்கள். புகாரி, இப்னு ஹிப்பான், இப்னு குஸைமா, அபூஹாத்திம், இப்னு முயீன் போன்ற பெரும் ஆய்வாரள்கள் மேற்கண்ட நபர் அறிவிக்கும் எந்த செய்தியும் நடைமுறைக்கு ஏற்றதல்ல, ஒதுக்கப்பட வேண்டியவை என விளக்கியுள்ளார்கள். எனவே பிரட்சனைக்குரிய பலவீனமான ஹதீஸ் முறையில் செயல்படக் கூடாது. நெஞ்சில் கை கட்டுவதுதான் சுன்னத். நபி (ஸல்) அவர்கள் அப்படித்தான் தொழுதுள்ளார்கள். நெஞ்சுக்குக்கீழ் தொப்புள்வரை எங்காவது கைகட்டுவது சுன்னத் என்று எவரும் கூறினால் அதற்குரிய வழுவான சந்தேகமற்ற ஹதீஸை எடுத்துக் காட்டுவது அவர்களின் கடமையாகும். 

 

3 கேள்வி: நாங்கள் வழமையாக ஓதிவரும் 'தனா' வை உலகமே ஏற்றுக்கொண்ட நிலையில், நீங்கள் புதிதாக 'அல்லாஹும்ம பாயித் பைனி' 'வஜ்ஜஹத்து' ஆகியவற்றைத்தான் ஓத வேண்டும் என்கிறீர்களே ஏன்?  N.யு. அப்துல் மாஜித், தென்காசி  

'உலகமே ஏற்றுக்கொண்ட நிலையில்' என்பது வார்த்தை விளையாட்டாகும். ஹனபி என்று தம்மைச் சொல்விக்கொள்பவர்கள் மட்டுமே இந்த 'தனா' விற்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள். மற்ற மூன்று மத்ஹப்வாதிகள் இதை ஏற்கவில்லை. (மத்ஹபிற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை. புரிந்து கொள்வதற்காக இங்கு குறிப்பிடுகிறோம்) 100 கோடி முஸ்லிம்களும் ஏற்றுக் கொண்டது போன்று வார்த்தையை பயன்படுத்தியுள்ளீர்கள். இது வெறும் மாயைதான். ஒரு வாதத்திற்கு உலகமே ஏற்றுக் கொண்டதாக வைப்போம், உலகமே ஏற்றுக் கொள்வதால் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகிவிடுமா? ஆதாரத்தை அலசிப் பார்க்க வேண்டாமா? இந்த 'தனா' என்ற 'சுப்ஹானகல்லாஹும்ம' துஆவை பரிசீலித்து அதிலுள்ள சந்தேகம் நிவர்த்தி செய்யப்பட்டுவிட்டதா?  சுப்ஹானக்கல்லாஹும்ம என்ற தனா சம்பந்தமான துஆ  1. அபூ-ஸயீத் (ரலி) மூலம் அறிவிக்கப்பட்டு அபூதாவுத், நஸயி, இப்னுமாஜா, திர்மிதியிலும், 2. ஆயிஷா (ரலி) மூலம் அறிவிக்கப்பட்டு அபூதாவுதிலும், 3. ஆயிஷா (ரலி) மூலம் அறிவிக்கப்பட்டு திர்மிதி, இப்னுமாஜாவிலும் பதிவாகியுள்ளது.  முதலாவது ஹதீஸில் 'அலி பின் அலி' என்பவர் வருகிறார். 'யஹ்யா பின் ஸயீத'!, 'அஹ்மத'; ஆகியோர் இவரை 'பலவீனமானவர்' எனக் கூறியுள்ளார்கள்.  இரண்டாவது ஹதீஸில் 'அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து இதைக் கேட்டு அறிவிப்பதாக வரும்  அபூ-ஜவ்ஹா என்பவர் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து எதையும் செவியேற்கும் வாய்ப்பை இழந்தவர்' என புகாரி (ரஹ்) கூறுகிறார்கள். எனவே இதுவும் பலவீனப்படுகிறது.  மூன்றாவது ஹதீஸில் 'ஹாதிஸா பின் அபூ-ரிஜ்ஜால'! என்;பவர் இடம் பெறுகிறார். 'இவர் பலவீனப்பட்டவர்' என புகாரி, நஸயி, திர்மிதி, யஹ்யா பின் ஸயீத், இப்னு முயீன் ஆகியோர் விமர்சித்துள்ளனர்.  இந்த விமர்சனங்களில் எது ஒன்றும் நிவர்த்தி செய்யப்படவில்லை. இதே நிலை தொடர்வதால் இத்தகைய ஹதீஸ்களை செயல்படுத்த முடியாது. நீங்கள் எழுதிய மற்ற இரு துஆக்களும் அறிவிப்பாளர்களில் எத்தகைய குறைபாடுகளும் இல்லாததால் அவற்றைப் பின்பற்றுவதுதான் ஒரு முஸ்லிமின் கடமையாகும். 

 

4 கேள்வி: ருகூஃவிற்குப் போகும்போதும், ருகூஃவிலிருந்து எழும்போதும் இரண்டாம் ரக்அத் முடிந்து மூன்றாம் ரக்அத்திற்கு எழுந்தவுடனும் காதுகள் வரை கையை உயர்த்துவது சரியா? ஆரம்ப தக்பீரின்போது மட்டும் கைகளை உயர்த்துவது போதாதா? ஆ. முஹம்மது திவான், தென்காசி

 இதைச் சற்று விரிவாகப் பார்க்க வேண்டும். ஹனஃபி மத்ஹபைச் சேர்ந்தோர் ஆரம்ப தக்பீரின்போது மட்டுமே கைகளை உயர்த்துவார்கள். ஷாஃபிகள் இன்றைக்கு நாம் உயர்த்துவது போன்று ஆரம்ப தக்பீர், ருகூஃ, ருகூஃவிலிருந்து எழுந்தபின் ஆகிய நிலைகளில் கைகளை உயர்த்துவார்கள். இந்த பிரிவினைக்கு இஸ்லாத்தில் இடமில்லை. நாம் இன்று உயர்த்தும் இடங்களிலெல்லாம் கைகளை உயர்த்துவதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.  1. புகாரியில் இப்னு உமர் (ரலி) வழியாக சில இடங்களில் மற்றும் மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி) மூலமாக, 2. அப்துல்லாஹ் பின் உமர், மாலிக் பின் ஹுவைரிஸ் வழியாக முஸ்லிமில், 3. வாயில் பின் ஹுஜ்ர், அபூஹுரைரா, அனஸ் பின் மாலிக், அபூ உஸைத், ஸஹ்ல் பின் ஸஃது, ஜாபிர் இப்னு அப்பாஸ் ஆகிய நபித் தோழர்கள் மூலமாக இப்னு மாஜாவில், 4. அபூ மூஸா அல அஷ்அரி (ரலி) வழியாக தாரகுத்னியில், 5. வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அறிவித்து நஸயி, அபூதாவுத், அஹ்மதில்,  இப்படி ஏராளமான நபித்தோழர்கள் மூலம் ஏராளமான நூல்களில், ஏராளமான ஹதீஸ்களில் இன்று நாம் நடைமுறைப் படுத்தும் செயலுக்கு ஆதாரமாக கிடைக்கின்றன. நபி (ஸல்) அவர்களுடன் ஆரம்ப காலத்திலிருந்து உடனிருந்த தோழர்களும் இச்செய்தியை அறிவிக்கிறார்கள். எனவே, பல சந்தர்ப்பங்களில் கைகளை உயர்த்துவது என்பது நபி (ஸல்) அவர்களின் நீணட கால நடைமுறையாக இருந்தது என்பதை விளங்கலாம்.  ஆரம்ப தக்பீர் தவிர மற்ற சந்தர்ப்பங்களில் கைகளை உயர்த்தக் கூடாது என்போரின் ஆதாரத்தைப் பார்ப்போம்.  1. உமர் (ரலி) அவர்கள் தொழும்போது பார்த்தேன். ஆரம்பத் தக்பீரின் போது மட்டுமே தம் கைகளை உயர்த்தினார்கள். அதன்பின் கைகளை உயர்த்தவில்லை.  'அஸ்வாத்' என்பர் அறிவித்து 'முஸ்னத் இப்னு அபீ ஷைபா' வில் இது பதிவாகியுள்ளது.  இதில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அஸ்வத், இப்ராஹீம், நத்யி, ஜுபைர் பின் அத்யா, அப்துல் மாலிக் பின் அப்ஹர், ஹஸன் பின கியாஷ், யஹ்யா பின் ஆதம், அப்னு அபுதாவுத், தஹாவி ஆகியோர் ஆவர். இதில் மூன்றாவது அறிவிப்பாளராக வரும் 'ஜுபைர் பின் அதிய்யா' என்பவர் யாரென்றே அறியப்படாதவர்! என அபூ-ஹாத்தம் தமது ஆய்வில கூறுகிறார்கள். ஹதீஸ்களைத் தரம் பிரித்துக் கூறும் பல நூல்களில் 'மீஸான்' என்ற நூலில் மட்டும் இவர் பெயர் இடம் பெறுகிறது. பெயர் மட்டும் இடம்பெறுகிறதே தவிர வேறு விவரங்கள் கிடைக்கவில்லை. தஹ்தீப் போன்ற சிறந்த ஆய்வு நூலில்கூட இடவரது பெயர் இடம் பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. எனவே, மேற்கண்ட ஹதீஸ் பலமிழந்து போய்விடுகிறது.  2. இப்னு மஸ்வூத் (ரலி) வாயிலாக ஆரம்ப தக்பீரின்போது மட்டும் கைகளை உயர்த்துவது சுன்னத் என்று ஒரு ஹதீஸ் நஸயியில் 1004வது ஹதீஸாக இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் நாமரிந்தவரை எந்த குறைபாடும் இல்லை. இது ஆதாரப்பூர்வமான செய்திதான். ஆனாலும் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.  இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக தவிர, வேறு எந்த நபித் தோழரும் இதை அறிவிக்கவில்லை.  இப்னு மஸ்வூத் (ரலி) வுடைய அறிவிப்புக்கு மாற்றமாக ஏறத்தாழ முப்பது நபித் தோழர்கள் உயர்த்த வேண்டும் என அறிவிக்கிறார்கள். இப்போது என்ன செய்வது? இப்னு மஸ்வூதுடைய ஒரு அறிவிப்பை மட்டும் ஏற்று மற்ற நபித் தோழர்களின் அறிவிப்பையெல்லாம் ஒதுக்கித் தள்ளி விடுவதா? அப்படித் தள்ள முடியாது. ஏனெனில் அந்த அறிவிப்புக்கள் அனைத்தும் மிக மிக வழுவான அறிவிப்புத் தொடரில் மிக முக்கிய நூல்களில் இடம் பெற்றுள்ளன. எனவே, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை உயர்த்தியதை இப்னு மஸ்வூத் (ரலி) பார்த்திருக்கலாம் என்று முடிவு செய்தால் முரண்பாடோ, குழப்பமோ இல்லாமல் போய்விடும். தொழுகையில் பல சந்தர்ப்பங்களில் கைகளை உயர்த்துவதுதான் நபி வழி என்பதை அழுத்தமாக விளங்கலாம். 

 

5 கேள்வி: தொழுகையில் தவ்ஹீத்வாதிகள் சப்தமாக 'ஆமீன்' கூறி அடுத்தவர்களுக்கு இடையூறு செய்கிறார்கள்? இப்படி செய்யலாமா? யு. ஜாஹிர் ஹுசைன், தென்காசி    

குர்ஆன், ஹதீஸை பின்பற்றுவோர் சப்தமாக ஆமீன் கூறி குழப்பம் செய்கிறார்கள் என்றால் அந்த லிஸ்ட்டில் நமக்கு முன்னால் இடம்பெற்றவர்கள் ஷாஃபி மத்ஹப்காரர்கள்தான். ஷாஃபி மத்ஹப்காரர்களுக்கு முன்னால் இடம்பெற்றவர்கள் சஹாபாக்கள். ஏனெனில் இவர்கள் அனைவரும் சப்தமாகத்தான் ஆமீன் கூறியுள்ளார்கள்.  'இமாம் வளள்ளாலீன் என்று கூறினால் நீங்கள் ஆமீன் கூறுங்கள். எவரது ஆமீன் சப்தம் வானத்திலுள்ள மலக்குகளின் ஆமீனுடன் ஒத்துப் போகிறதோ அவரது பாவங்கள் மண்ணிக்கப்படுகின்றன' என்பது நபிமொழி. (அபூஹுரைரா, புகாரி)  அபூ-ஹுரைரா (ரலி) இமாமை அழைத்து 'ஆமீன் கூறும் வாய்ப்பை எனக்குத் தவரும்படி செய்துவிடாதீர் (அதாவது மக்கள் ஆமீன் கூறிய பிறகு அடுத்த சூராவை ஓதும்)' எனக் கூறினார்கள்.  இப்னு உமர் (ரலி) ஆமீன் கூறுவதை விடாமலும், அதில் ஆர்வமூட்டக்கூடியவர்களாகவும் இருந்தார்கள்.  இப்னு ஜுபைரை பின்பற்றி தொழுதவர்கள் பள்ளிவாயில் எதிரொலிக்கும் அளவிற்கு வேகமாக ஆமீன் கூறுபவர்களாக இருந்தனர்;. இந்த விவரங்கள் அனைத்தும் புகாரியில் இடம்பெற்றுள்ளது.  இமாம் அல்ஹம்து முடித்த பிறகு ஆமீன் சப்தமாகக் கூறுவதற்கு போதிய விபரத்தை இதில் நீங்கள் அறியலாம். இமாமைப் பின்பற்றி தொழும் எல்லோரும் இந்த சுன்னாவைக் கடைப்பிடித்து சப்தமாக ஆமீன் கூறத் துவங்கிவிட்டால் குழப்பம், இடையூறு என்ற பேச்சுக்கே இடமில்லை. 

 

6 கேள்வி: தொழுகையில் விரலை நீட்டியும், மடக்கியும் எந்த பிரச்சினையுமில்லாமல் தொழுது வந்த தமிழகத்தில் விரலை ஆட்டி தவ்ஹீத்வாதிகள் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டிற்கு என்ன பதில்? டு. காதர்கான், ஊ.N. பாளையம்  

நபி (ஸல்) அவர்களின் தலையில் இருந்த நரையைக்கூடக் கணக்கிட்டு சொன்ன நபித் தோழர்கள் விரல் அசைத்தலை மட்டும் சொல்லாதது ஏன்? ஒரே ஒரு நபித் தோழர் மட்டும்தான் அறிவிக்கிறாரா? ஆயிஷா (ரலி) கூட அறிவிக்கவில்லையே! விரலை மடக்கும் ஹதீஸ் அபூதாவுதில் உள்ளதே, விரலை அசைக்காமல் இருந்;தால் தொழுகை கூடாதா? எம். முஜிபுர் ரஹ்மான், மேலக்காவேரி   நபி (ஸல்) அவர்களின் வழிமுறை எல்லாவற்றையும் பார்த்துத்தான் அறிவிக்க வேண்டுமென்று எந்த சட்டமும் இல்லை. பார்த்ததை அறிவிக்க வேண்டும் என்பது மட்டும்தான் கட்டளை. எவர்கள் எதை பார்த்தார்களோ அதை அறிவித்துள்ளார்கள். நீங்கள் குறிப்பிட்ட நரை முடி விஷயத்தையே எடுத்துக் கொள்வோம்.  அனஸ் பின் மாலிக், இப்னு உமர், ஜாபிர் பின் ஸமூரா ஆகியோர்தான் நபி (ஸல்) அவர்களின் நரை முடி பற்றி அறிவிக்கிறார்கள். மிக மிக நெருக்கமாக இருந்த அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நரைமுடி சம்மந்தமாக சொன்ன அறிவிப்பு நாமரிந்தவரைக் கிடைக்கவில்லை. நபி (ஸல்) அவர்களின் எல்லா செயல்களையும் எல்லோரும் அறிவிக்க வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. கிடைத்த அறிவிப்பை வைத்து செயல்படுவதுதான்நமது கடமை. மற்றவர்கள் ஏன் இதை அறிவிக்கவில்லை என்று இறைவன் நம்மிடம் கேட்கமாட்டான். இந்த விளக்கம் இஸ்லாமட வகுத்துள்ள எல்லா சட்டங்களுக்கும் பொருந்தும். ஒரு நபித்தோழர் மட்டும் அறிவித்தாலும், அந்த அறிவிப்பு பலமானதாக இருந்தால் அந்த அறிவிப்பிற்கு எதிரான அல்லது அந்த அறிவிப்பை பலவீனப்படுத்தக்கூடிய, கருத்தை மறுக்கக் கூடிய வேறு அறிவிப்பு இல்லாதவரையில் அந்த ஒரு செய்தியை செயல்படுத்துவதற்கு எத்தகைய தயக்கமும் கூடாது.  தொழுகை இருப்பில் விரலசைக்க வேண்டுமென்ற செய்தி பலமானதாகும். அதை உறுதிப்படுத்தும் வேறு அறிவிப்புகளும் உள்ளன. சர்ச்;;;;சைக் கிளப்பப்பட்ட விஷயங்களும் உள்ளன. எல்லா விஷயங்களையும் விரிவாக அறிவோம்.  1. ' நபி (ஸல்) அவர்கள் இடது தொடை மீது இடது முன்னங்கை வைப்பார்கள். வலது தொடை மீது வலது முன்கையை வைப்பார்கள். கடைசி இரண்டு விரல்களை மடக்கிக் கொண்டு கட்டை விரலையும் நடு விரலையும் வளையம்போலாக்கி தமது ஆள்காட்டி விரலை உயர்த்தி அழைப்பதுபோல் அசைத்;ததை நான் பார்த்தேன் ' அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) நூல்கள்: நஸயி (பக்-126), அப்னு ஹிப்பான் (பக்-167), தாரமி (பக்-314), அஹ்மத்; (பக்-318)  2. 'நபி (ஸல்) அவர்கள் தமது தஷஹ்ஹுதில் உட்கார்ந்து விரலை உயர்த்தி இஷார செய்வார்கள்' அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: முஸ்லிம்  3. 'நபி (ஸல்) அவர்கள் தமது அத்தஹியாத்தில் தமது ஆள்காட்டி விரலால் இஷாரா செய்வார்கள்' அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: தாரமி  இதே கருத்தை வலியுறுத்தி இன்னும் பல ஹதீஸ்கள் உள்ளன. இதில் இரண்டாவது மூன்றாவது ஹதீஸ்களிலும் இமை வலியுறுத்தும் ஹதீஸ்களிலும் 'இஷாரா' என்ற பரம் வந்துள்ளன. ஒரு செயலை வாயால் மொழியாமல் செயலால் செய்வதே 'இஷாரா' வாகும். உதாரணமாக வாய் பேச முடியாதவர்களின் எல்லா செயல்களும் 'இஷாரா' தான். நபி (ஸல்) 'இஷாரா' செய்துள்ளார்கள் என்பது தெளிவான விஷயம். அந்த இஷாரா எப்படி இருந்தது? அதை விளக்குகிறது நாம் முதலாவதாக எடுத்துக்காட்டிய செய்தி.  ' நபி (ஸல்) இஷாரா செய்வார்கள் அந்த இஷாரா எப்படி இருந்ததென்றால் விரலை உயர்த்தி (யாரையோ) அழைப்பதுபோல்' இருந்தது என வயில் பின் ஹுஜ்ர் (ரலி) தெளிவாக விளக்குகிறார். இஷாரா என்பதும், விரலசைப்பு என்பதும் முரண்பட்ட விஷயமல்ல. ஒன்றை விள்கும்படியாக மற்றொண்டு அமைந்துள்ளது.  'பேனாவால் எழுதுவதைப் பார்த்தேன். அது !மை! போனாவாக இருந்தது' என்று எவரும் கூறினால் இதை முரண்பாடாக கருத மாட்டோம். முதல் வாசகம் பேனா என்கிறது. இரண்டாம் வாசகம் பேனாவின் தன்மையைக் கூறுகிறது. இதே போன்றுதான் இஷாராவிற்கு விளக்கமாக விரல் அசைப்பார்கள் என்ற பதம் வந்துள்ளது. எனவே, இஷாரா என்று வரும் ஹதீஸை எவராவது செயல்படுத்துவதாக இருந்தால் இன்னொரு ஹதீஸ் இதற்கு விளக்கமாக அமைந்துள்ளதால் விரல் அசைப்பின் மூலமாகத்தான் செயல்படுத்த முடியும்.  இந்த ஹதீஸ் சம்பந்தமாக சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவற்றையும் விளக்குவோம் (கிளிக் செய்யவும்)

 

7 கேள்வி: சூரத்துல் ஸஜ்தாவின் 5வது வசனத்தை (32:5) பற்றி விளக்கவும் (சகோதரி தாஹிரா) 

வானத்திலிருந்து பூமிவரையிலுமுள்ள காரியத்தை அவனே நிர்வகிக்கின்றான். நான் அவனிடமே மேலேறிச் செல்லும் அதன் அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும் (32:5).  இதுதான் நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள வசனம்.  இந்த உலகில் மனிதன் வாழும் காலகட்டங்களோ அல்லது மறுமையில் விசாரனை மற்றும் தீர்ப்பிற்குறிய கால கட்டங்களோ மனிதன் இன்று கணக்கிட்டு அனுபவிக்கக் கூடிய கணக்குப்படி இருக்கிறது. அதாவது பூமி தன்னைத் தானே சுற்றி வருவதை ஒரு நாள் என்று மனிதன் கணக்கிட்டுக் கொண்டான். பூமியின் இந்த இயக்கம் மனிதனின் பலவீனத்திற்கேற்ப இறைவனால் தீர்மானிக்கப்ட்டதாகும். அவனது உழைப்பிற்கும், ஓய்விற்கும் ஏற்ற இயக்கமாகும் இது.  மனிதன் உழைப்பதற்காகப் பகலையும், அவன் ஓய்வு பெறுவதற்காக இரவையும் ஏற்படுத்தியுள்ளதாக இறைவன் தன் திருமறையில் (குர்ஆனில்) பல இடங்களில் குறிப்பிடுகிறான்.  பூமியின் இந்த இயக்கம் மொத்த பிரபஞ்சத்துடைய இயக்கமல்ல. பூமியை தவிர்த்து இதர கோள்கள் மற்றும் பிரபஞ்சத்துடைய நகர்வு எதுவும் பூமி இயங்கும் வேகத்தில் இயங்கக் கூடியதல்ல. இதைவிட வேகமாகவோ மெதுவாகவோதான் சுழல்கின்றன. மனிதன் வகுத்துள்ள நாள், மாதம், வருடம் என்பது இந்த பூமிக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாகும்.  பூமியின் இந்த சுழற்சி, வருடங்களோடு மனிதனின் வயதையும் தீர்மானிக்கிறது. ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்பதை உணர்த்துவது பூமியின் இயக்கம்தான்.  இந்தப் பூமியில் வாழத்துவங்கிய மனிதன், ஆரம்பகாலத்தில் நீண்ட காலம் வாழத்துவங்கி பல்வேறு காரணங்களால் மனிதனின் வயது சுருங்கி இன்று சராசரியாக அறுபது, எழுபது ஆண்டுகள் வாழ்ந்தாலும்; அவனது ஆணவமும், திமிர்தனமும் மட்டும் குறையவேயில்லை. இதற்குக் காரணம் வாழ்வின்மீது அவனுக்குள்ள போராசைதான்.   இந்தப் பேராசையை இடித்துரைக்கும் விதமாகப் பேசும் வசனங்களில் ஒன்று நீங்கள் கேட்டுள்ள வசனத்தை ஒத்தே அமைந்துள்ளது.  வேதனையை அவர்கள் அவசரமாகத் தேடுகிறார்கள். அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை. மேலும் உம்முடைய இறைவனிடம் ஒருநாள் என்பது நீங்கள் கணக்கிடுகின்றன ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும். (அல்ஹஜ் - 22:47)  இறைவனின் வேதனையைப் பற்றி மனிதனிடம் எச்சரிக்கப்படும் போது நான் இவ்வளவு காலம் வாழ்கிறேன், ஏன் இறைவனின் தண்டனை வரவில்லை என்று அவன் கேட்கிறான். மனிதனைப் பொறுத்தவரை அவனுக்கு இந்த வாழ்க்கை நீண்டதாகத் தெரியலாம். இறைவனின் பார்வையில் இது ஒன்றுமே இல்லாதது. அதிகபட்சமாக நீங்கள் ஆயிரம் ஆண்டுகளைக் கணக்கிட்டால் அல்லது வாழ்ந்தால் அதையே இறைவன் ஒரு நாள் என்றுதான் எடுத்துக் கொள்கிறான். ஆயிரம் ஆண்டு வாழ்க்கையையே ஒருநாள் வாழ்க்கை என்று தீர்மாணிக்கப்பட்டால் அறுபது, எழுபது வருட வாழ்வின் நிலை என்ன, ஒரு சிலமணி நேர வாழ்க்கையே ஆகும்.  பூமியின் இயக்கத்தால் கணக்கிடப்படக்கூடிய ஆண்டுகளை மனிதன் கருத்தில் எடுத்துக் கொண்டு இருமாப்பு கொள்வதால், நீ பூமியில் ஒரு சில மணி நேரம்தான் வாழ்ந்தாய் என்று மனிதனிடம் கூறினால், இவனால் ஏற்றக்கொள்ள முடியவில்லை. மரணத்திற்குப் பிறகுள்ள மறுமை நாள் விசாரணையில் இந்த பூமியின் சுழற்சி இருக்கிறது, இந்த கணக்கீடு அன்றைய தினம் செல்லாக்காசாகி விடும். அன்றைக்கு மனிதனால் இந்த பூமி வாழ்க்கையைக் கணக்கிட்டுக்கொள்ள முடியும். 'அவன் அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில் தாங்கள் பகலில் சொர்ப்ப காலமே அவ்வுலகில் தங்கி இருந்ததாக (விளங்கிக்கொள்வார்கள்)' (யூனுஸ் - 10:45).   மறுமையில் மனிதர்கள் அனுபவிக்கும் பகல் பொழுதோ அல்லது இரவுப் பொழுதோ அல்லது இரண்டுக்கும் அப்பாற்பட்ட ஒரு பொழுதோ இந்த பூமியுடைய பொழுதுகளோடு கொஞ்சம்கூட ஒத்திருக்காது. அங்கு நடக்கும் நிகழ்வுகளும், விசாரனைகளும் மிக நீண்ட நெடிய பொழுதுகளைக் கொண்டதாக இருக்கும். அங்கு நடக்கும், அதாவது இறைவனை நோக்கிச் செல்லும் விசாரனை ஒரு நாளைக் கடப்பது பூமி இயக்கத்தின் ஆயிரம் வருடங்களுக்கு ஒப்பானதாகும். நீங்கள் விளக்கம் கேட்டுள்ள 32:5 வது வசனத்தில் இடம்பெறும் 'அவனிடம் மேலேறிச் செல்லும் கால அளவு' என்பது மறுமைப் பொழுதைக் குறிப்பதாகவே விளங்க முடிகிறது. (இறைவன் மிக்க அறிந்தவன்) 

 

8 கேள்வி: ஆண்கள் மறுதாணி இடக்கூடாது என்று கேள்விப் படுகிறேன். இது ஹராமா? விளக்கவும்: (நூருல்லாஹ்)  

 பெண்கள் தங்கள் கைகளின் (உள்ளங்கை) நிறங்களை மறுதானியால் மாற்றிக் கொள்ளலாம் என்றும், ஆண்கள் மறுத்துவத்திற்கு மட்டும் மறுதாணியைப் பயன்படுத்தட்டும் என்றும், நறைத்த தலை முடியை மற்றும் தாடியின் முடிகளை மருதாணியால் மாற்றலாம் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்திகள் திர்மிதி, இப்னு மாஜா போன்ற ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ளது. எனவே ஆண்கள் அழகுக்காக மறுதாணி இடுவதை தவிர்க்க வேண்டும். நபி (ஸல்) அவர்களும் தமது நரைத்த முடிகளை மருதாணியால் மாற்றியுள்ளார்கள். 

 

9 கேள்வி: முஸ்லிம் பின்புறம் கைகளைக் கட்டக் கூடாது என்று கூறுகின்றார்களே - விளக்கவும், (சகோதரர் ஷரீப்;)  

 பள்ளியில் இருக்கும்போது விரல்களைக் கோர்த்துக் கொள்வதற்கும், உள்ளாடையில்லாமல் ஒரே ஆடையுடன் இருக்கும்போது முட்டிக்கால்களில் கைகளைக் கட்டிக்கொண்டு அமர்வதற்கும் ஹதீஸ்களில் தடை வந்துள்ளது. பின்புரம் கைகளைக் கட்டுவதற்கு எந்தத் தடையுமில்லை. சொல்பவர்களிடம் ஆதாரம் - காரணம் கேளுங்கள். சொல்லாவிட்டால் இத்தகைய கருத்துக்களை அலட்சியப் படுத்துங்கள். 

 

10 கேள்வி: உடலுறவின்போது கணவன் மணைவி கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறை என்ன? (சகோதரர் ஷரீப்)    

மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளபோது அவளோடு உடலுறவு கொள்ளக் கூடாது (உடலுறவுக்கு மட்டும்தான் தடை). அதே போன்று அவளது மலப்பாதையில் உடலுறவு கொள்ளக் கூடாது. இந்த இரண்டு தடைகளைத் தவிர உடலுறவுக்கு வேறு எந்தத் தடையும் இல்லை. உறவைத் துவங்கும்போது மணைவியின் முன் நெற்றி முடிகளைப் பிடித்து 'இறைவனின் பெயரால் துவங்குகிறேன், இறiவா இந்த உறவின் மூலம் நீ நமக்குக் குழந்தையைக் கொடுத்தால் அதை ஷைத்தானின் தீங்கை விட்டும் பாதுகாத்தருள்!' என்ற பிரார்த்தனையைச் செய்து உறவுகொள்ள வேண்டும்.  'அல்லாஹும்ம ஜன்னிப்னிஷ் ஷைத்தான வ ஜன்னிபஷ் ஷைத்தான மா ரஸக்தனா'  'மாதவிடாய் என்பது ஒரு உபாதையாகும். எனவே அப்போது பெண்களை விட்டு விலகி இருங்கள், அவர்கள் தாய்மையாகும்வரை உறவு கொள்ளாதீர்கள். தூய்மைக்குப் பின் அல்லாஹ் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்.' (2:222)  'உண்மையைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். பெண்களின் மலப்பாதையில் உறவு கொள்ளாதீர்கள், அதை அவன் தடுத்துள்ளான் என்பது நபிமொழி.' (ஆதாரம்: திர்மிதி) 

 

11 கேள்வி: ஜகாத் பற்றி விளக்கம் தேவை. நகைக்கு ஜகாத் உண்டா? சொந்த வீடு மற்றும் கடைக்கு கொடுக்க வேண்டுமா? வீட்டில் உள்ள பொருள்களுக்குக் கொடுக்க வேண்டுமா? வீட்டு மனை நிலங்கள் இருந்தால் அவைகளுக்கும் கொடுக்க வேண்டுமா? (சகோதரர்: நூருல்லாஹ்;)   

 நாம் உபயோகிக்கக் கூடிய வீடு, வீட்டுப் பொருள்கள் உட்பட எல்லாவற்றிற்கும் ஜகாத் கொடுக்க வேண்டுமா அல்லது சிலதை கழித்துவிட்டு ஜகாத் கொடுக்க வேண்டுமா என்பதுபற்றி கருத்து வேறுபாடு நிலவுகிறது. எனவே இதுபற்றி முதலில் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.  நாம் உபயோகிக்கும் பொருட்கள் உட்பட எல்லாவற்றிற்கும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்போர் அதற்குச் சான்றாக இரண்டு இறை வசனங்களைக் காட்டுகிறார்கள்.  '(நபியே) அவர்களுடைய பொருட்களிலிருந்து தர்மத்தை எடுத்துக் கொண்டு அவர்களை உள்ளும் - புறமும் தூய்மைப் படுத்துவீராக' (அல் குர்ஆன் - 9:103)  இந்த வசனத்தில் 'மின் அம்வாலிஹிம்' என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 'அம்வால்' என்றால் பொருட்கள் - செல்வம், நகைகள், கரன்ஸி, இதர நமது சம்பாத்தியத்தில் வந்த அல்லது நமக்குப் பிறர் கொடுத்த, வாரிசு முறையில் வந்த எல்லாச் சொத்துக்களையும் குறிக்கும். இறைவன் 'அம்வாலி' லிருந்து தர்மம் செய்யச் சொல்வதால், நமது வீடு அதிலுள்ள பொருள்கள் உட்பட எல்லாவற்றிற்கும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று இவர்கள் கூறுகிறார்கள். இக்கருத்தை வழுப்படுத்தும் இன்னொரு வசனத்தையும் இவர்கள் கூறுகிறார்கள்.  'எந்த செல்வத்திற்கு இறைவன் உங்களை பிரதிநிதியாக்கினானோ அந்த செல்வத்திலிருந்து செலவு செய்யுங்கள்' (அல்குர்ஆன் - 57:7)  இறைவன் பிரதிநிதியாக்கியுள்ளான் என்றால் அதில் நாம் உபயோகிக்கும் பொருட்களும் அடங்கும் என்பது எல்லாவற்றிற்கும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பது இவர்களின் நிலைபாடு.  இதில் நமக்கு உடன்பாடில்லை. காரணம்: 'அம்வால்' என்பதை இறைவன் எந்த அர்த்தத்தில் பயன்படுத்தியுள்ளான் என்பதை மற்ற வசனங்களைப் பார்க்கும்போது விளங்க முடியாது.  '(நபியே) எதை (இறைவழியில்) செலவு செய்ய வேண்டும் என்று உம்மிடம் கேட்கிறார்கள். உங்கள் தேவைக்குப் போக மீதமுள்ளதைச் செலவு செய்யுங்கள் என்று கூறுவீராக' (2:219)  இந்த வசனம் தெளிவாகவே 'அம்வாலை' இரண்டு அர்த்தத்தில் பிரித்துவிடுகின்றன - ஒன்று முஸ்லிம்களின் சொந்தத் தேவைக்குறியவை மற்றொண்டு மேலதிகமானவை.  வாழ்வாதார தேவைக்குறியவைகளில் வீடும், வீட்டுப் பொருட்களும், வீட்டார் பயன்படுத்திக் கொள்ளும் வாகனமும் அடங்கிவிடும். குடும்பத்திற்காகச் செலவிடப்படும் தொகை ஜகாத் தொகைக்குரிய தகுதியைப் பெறாது.  முஸ்லிம்களின் சொந்தத் தேவைக்குறியது என்ன என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.  மனிதன் தன் வாழ்வாதாரத் தேவைகளை மிக வேகமாகப் பெருக்கிக் கொண்டு வந்துவிட்டான். மேற்கண்ட 2:219வது வசனம் இறங்கம்போது அந்த மக்களின் தேவை வெகு சொற்பமே. வீடும், வாகனமும், உணவும், உடையும் போக மீதி இருப்பவை அனைத்தும் மேலதிகமானதே. வளர்ச்சி பெற்ற நூற்றாண்டுகளில் குறிப்பாக இந்த நூற்றாண்டில் மனிதனின் அத்தியாவசியத் தேவை அதிகப்பட்டு விட்டது. குளிர் சாதனப் பெட்டிகள், தெலைகாட்சி, தொலைபேசி, இணையம் என்று ஒவ்வொன்றும் வசதிக்கேற்ப மனிதனுக்கு அவசியமாகி விடுகிறது. பேரரிவாளனான இறைவன் இதையெல்லாம் உள்ளடக்கியே தன்னுடைய வார்த்தையை பயன்படுத்தியுள்ளான். 'தமது தேவைக்குப் போக மீதமுள்ளதை' என்று.  தேவைகள் அதிகரித்து அதற்கேற்ப வீட்டில் பொருட்கள் 'அம்வால்' பயன்படுத்தப்பட்டால் அதற்கு ஜகாத் தேவையில்லை.  'தேவைக்குப் போக மீதமுள்ளதை தர்மம் செய்வதே சிறந்ததாகும்' என்ற நபிமொழியும் இங்கு கவனிக்கத் தக்கது. (அபுஹுரைரா ரலி - புகாரி 14:26)  வீடு இல்லாதவர்கள் சொந்த வீடு கட்டுவதற்காக நிலம் வாங்கி போட்டிருந்தால், அவை வீடு கட்டுவதற்குரிய அளவுள்ள இடமாக இருந்தால் அதற்கு ஜகாத் இல்லை. ஏனெனில், அவை நமது தேவைக்கு உட்பட்டதாகும். அதிகப்படியான நிலங்கள் மேலதிகமான சொத்தாக இருந்தால் அவற்றிற்கு ஜகாத் கொடுத்தாக வேண்டும்.  வாடகை வரும் கட்டிடம், வருமானமுள்ள கடை இவைகளில் வாடகைக்கும், வருமானத்திற்கு மட்டுமே ஜகாத் கொடுக்க வேண்டும். மாறாக வருமானம் வரும் கடைக்கோ, கட்டிடத்திற்கோ ஜகாத் கொடுக்க தேவையில்லை என்பதே சரியாகத் தெரிகிறது.  காரணம்: விளச்சல் நிலங்களைப் பற்றி குர்ஆனும், ஹதீஸும் குறிப்பிடும்போது - விளையும் பொருட்களுக்கு மட்டுமே ஜகாத் கொடுக்கச் சொல்கிறது. விளையும் நிலங்களைக் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.  இறை நம்பிக்கையாளர்களே! .. நாம் உங்களுக்கு பூமியிலிருந்து வெளிப்படுத்திக் கொடுத்தவற்றிலிருந்து செலவு செய்யுங்கள். (அல்குர்ஆன் - 2:267)  .. அவற்றை அருவடை செய்யும் நாட்களில் அவற்றின் பாகத்தைக் கொடுத்து விடுங்கள். (அல்குர்ஆன் - 6:141)  இந்த வசனங்களில் பூமியிலிருந்து வெளிவந்த பொருட்களுக்கு மட்டுமே இறைவன் ஜகாத் கொடுக்கச் சொல்கிறான். புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸாயி ஆகிய ஹதீஸ் தொகுப்புகளில் ஜகாத் பற்றி விரிவாக வந்துள்ளது. அவைகளிலும் விளைச்சலுக்கு மட்டுமே ஜகாத் கொடுக்கும் உத்தரவு வந்துள்ளது. விளையும் நிலத்திற்கும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று எங்கும் காணப்படவில்லை. விளைநிலம் மக்களுக்கு பயனளிக்கக்கூடியதாக இருப்பதால், இறைவன் இந்த சலுகையை வழங்கி இருக்கலாம்.   எனவே, வருமானம் வரக்கூடிய வகையில் உள்ள கட்டிடங்கள் அல்லது கடைகளோ இருந்தால் அவற்றின் வருமானத்திற்கு ஜகாத் கொடுத்தால் போதும் (அல்லாஹ் மிக்க அறிந்தவன்). வருமானம் இல்லாமல் வீட்டு மனைகள் வாங்கப்பட்டிருந்தால் அவற்றின் மதிப்பிற்கு ஜகாத் கொடுத்தாக வேண்டும். ஏனெனில் வங்கிகளில் பணம் சேமிக்கப் படுவது போன்று இங்கு நிலங்களின் மீது பணம் சேமிக்கப் படுகிறது. மேலதிக 'அம்வால்' களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமென்ற இறைவனின் கட்டளையில் இந்த காலிமனைகள் அனைத்தும் அடங்கிவிடும்.  பெண்கள் அணியும் நககைகள், பீரோவில் உள்ள நகைகள், லாக்கரில் பூட்டப்பட்டுள்ள நகைகள் இவற்றிற்கும் ஜகாத் கொடுத்தாக வேண்டும்.  'யார் தங்கத்தையும் - வெள்ளியையும் சேமித்து வைத்து அல்லாஹ்வின் பாதையில் அவற்றை செலவு செய்யாமல் வாழ்கிறார்களோ அவர்களுக்குக் கடும் தண்டனையுண்டு' (அல்குர்ஆன் - 9:34,35)  இறைவழியில் செலவு செய்யாமல் சேமித்து வைப்போருக்குத் தண்ணடணையுண்டு என்று கூறுவதால் அவற்றின் மீதும் ஜகாத் கடமையாகிறது. பெண்கள் தங்கத்தைச் சேர்த்து வைக்கவில்லை, அதன் மூலம் தம்மை அழகுபடுத்திக் கொள்கிறார்கள் அதனால் அதற்கு ஜகாத் தேவையில்லை என்றெல்லாம் யாரும் சமாதானம் சொல்ல முடியாது. தம்மை அழகுபடுத்திக் கொண்டு தொழ வந்த பெண்களிடம்தான் நபி (ஸல்) அவர்கள் உபதேசம் செய்கிறார்கள். உடனே பெண்கள், தமது காது வளையங்கள், கால் மெட்டிகள், வளையல்கள் எல்லாவற்றையும் கழற்றி அவற்றை இறைவனின் பாதையில் கொடுக்கிறார்கள். (புகாரி)  பெண்கள் தமது கைகளில் அணிந்திருந்த தங்கக் காப்புகளுக்கு நபி (ஸல்) அவர்கள் ஜகாத் கொடுக்கச் சொன்ன விபரம் அமீரிப்னு ஷுஐப்(ரலி) அறிவித்து அபூதாவூதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, பெண்கள் தங்க நகைகளுக்கு ஜகாத் கொடுக்கத்தான் வேண்டும். 

 

12 கேள்வி: நபிகள் நாயத்தை இறுதித் தூதர் என்று நம்புகிறோம். இதற்கு குர்ஆனில் எந்த அத்தியாயத்தில் ஆதாரம் உள்ளது. (சகோதரர் நூருல்லாஹ் - யாஹு)    

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறுதித் தூதர்தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இதைத் தெளிவாகவே குர் ஆன் அறிவிக்கின்றது.  'முஹம்மத் உங்கள் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை, ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களின் முத்திரை (இறுதி)யாகவும் இருக்கிறார். மேலும், அல்லாஹ் எல்லா பொருட்கள் பற்றியும் அறிந்தவனாக இருக்கிறான்.' (அல் குர்ஆன் - 33:40)  இந்த வசனத்தில் அவர் நபிமார்களில் இறுதியானவராக இருக்கிறார் என்று அல்லாஹ் தெளிவாகக் குறிப்பிட்டு விட்டான். இந்த வசனத்தை புரிந்துகொள்வதில் சிலருக்குக் குழப்பம் ஏற்பட்டு இறுதி நபித்துவத்தை சந்தேகிக்கிறார்கள். அத்தகைய ஏதாவது செய்திகள் உங்களுக்கு கிடைத்தால் எழுதுங்கள். பின்னர் இறுதி நபித்துவம் பற்றி விரிவாக விளக்குவோம். இன்ஷா அல்லாஹ். 

 

13 கேள்வி:  ஹஜ் தாய்-தந்தைக்காக எப்படி செய்வது. தனித்தனியாக செய்ய வேண்டுமா? உம்ராவும் அப்படிதானா..?  முஹம்மது இக்பால் (ரியாத்), முஹம்மதுபைஜுல் (மதீனா), மேலசாலை எ.ரஜிபுத்தீன்(கத்தார்);, எம்.ஜாக்கீர் ஹுசேன் (சவுதிஅரேபியா). 

ஹஜ், உம்ரா செய்வது குறித்து பல குர்ஆன் வசனங்களும் ஏராளமான நபிமொழிகளும் உள்ளன.

ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காக பூர்த்தி செய்யுங்கள் (அல்குர்ஆன் 2:146). இதே கருத்தை வலியுறுத்தி பல ஹதீஸ்கள் உண்டு.  அங்கு செல்வதற்குறிய, அல்லாஹ்வின் பாதையில் பயணம் செய்வதற்கு சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். (அல்குர்ஆன் 3:97).  இந்த வசனத்தில் யார் சக்தி பெறுகிறாரோ அவர் மீது கடமை என்கிறான் இறைவன். வெறும் பொருளாதாரம் மட்டுமின்றி வாகன வசதி, உணவு வசதி, உடல் நிலைசீராக இருப்பது போன்ற எல்லா சக்தியையும் ஒருவர் பெற்றிருந்தால்தான் அவர்மீது ஹஜ் கடமையாகும்;;;.  

இத்தகைய வசதி இருந்தும் ஒருவர் ஹஜ் செய்ய முடியாமல் போய்விட்டால் அவருக்கு அவரது ரத்த பந்தங்கள் ஹஜ் செய்வது கூடும். இவ்வாறு பிறருக்காக ஹஜ் செய்பவர்கள் முதலில் தம்முடைய ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டுதான் பிறருக்கு ஹஜ் செய்யவேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாகும்.  ஒரு மனிதர் சுப்ருமாவிற்காக ஹஜ் செய்ய போகிறேன் என்று கூறியதை நபி (ஸல்) செவியேற்றார்கள். உடனே சுப்ருமா என்பவர் யார்? என நபி (ஸல்) கேட்டார்கள். அதற்கு அவர் என் சகோதரர் என்றோ உறவினர் என்றோ கூறினார். உனக்காக நீ ஹஜ் செய்து விட்டாயா? என நபி (ஸல்) கேட்டார்கள். அதற்கவர் இன்னும் இல்லை என்றார். முதலில் உனக்காக ஹஜ் செய்த பிறகு அவருக்காக செய் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), (அபூதாவூத் , இப்னுமாஜா )  பிறருக்காக அதாவது ரத்த பந்தங்களுக்காக ஹஜ் செய்ய எண்ணும் அனைவருக்கும் இந்த சட்டம் பொருந்தும் உறவினருக்காக ஹஜ் செய்யலாமா? என்ற இரண்டாவது கேள்விக்குறிய பதிலும் இதில் அடங்கியுள்ளது. சகோதரர் என்றோ, அல்லது உறவினர் என்றோ... என்ற சந்தேக வார்த்தை இங்கு வருகிறது. இதுபோன்ற வார்த்தைகளில் நாம் பெறக்கூடிய சட்டம் இறைவன் நமக்களித்த சலுகை என்றே கருத வேண்டும்.  மூன்றாவது கேள்வியில் மனைவிக்கு ஹஜ் செய்யலாமா? எனகேட்கப்படுகிறது. ஹஜ் யார் மீது கடமை என்று நாம் ஏற்கனவே விளக்கியுள்ளோம். அத்தகைய சக்தி பெற்றிருந்தால் அவரை வீட்டில் உட்கார்த்தி வைத்துவிட்டு நீங்கள் ஹஜ் செய்வது சரியான முறையில்லை. தேவையான ஆண் துனையுடன் உங்கள் மனைவி ஹஜ் செய்வதே முறையாகும்.  தாய், தந்தைக்கு ஹஜ் கடமையான நிலையில் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டாலோ, அல்லது மரணித்து விட்டாலோ அவர்களுக்காக பிள்ளைகள் (பெண்பிள்லைகள் உட்பட) ஹஜ் செய்யலாம். இதற்கு அவர்களின் அனுமதி பெறவேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஜுஹைனா என்ற கோத்திரத்திலிருந்து ஒரு பெண் நபி(ஸல்) அவர்களை சந்தித்து என் தாயார் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தார். அவர் மரணிக்கும் வரை ஹஜ் செய்யவே இல்லை. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யட்டுமா? எனக்கேட்டார். அதற்கு நபி(ஸல்) ஆம் உன் தாயாருக்கு கடன் இருந்தால் நீ நிறைவேற்றுவாயல்லவா? அதைபோன்று இதையும் நிறைவேற்று என்றார்கள். (ராவி:இப்னு அப்பாஸ்(ரலி) , புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூ தாவூத், அஹ்மத்)  ஸன்அம் என்ற கோத்திரத்தை சேர்ந்த ஒரு பெண் அல்லாஹ்வின் தூதரே என் தந்தைக்கு ஹஜ் கடமை இருக்கிறது. அவரால் ஒட்டகத்தில் சவாரி செய்ய முடியவில்லை என்று கூறினார். அவருக்காக நீ ஹஜ் செய் என நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), (புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், அஹ்மத்)  ஹஸ்அம் கோத்திரத்தை சார்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். இறைத்தூதரே! என் தந்தை முதிர்ந்த வயதில் இஸ்லாத்தை ஏற்றுள்ளார். அவருக்கு ஹஜ் கடமை இருந்தும் அவரால் வாகனத்தில் ஏற முடியவில்லை அவருக்கு நான் ஹஜ் செய்யலாமா? எனக் கேட்டார். அவரது பிள்ளைகளில் வயதில் மூத்தவர் நீர்தானா? என நபி (ஸல்) கேட்டார்கள். அவர் ஆம் என்றார்.உம் தந்தைக்கு கடன் இருந்து அதை நிறைவேற்றுவாயா? எனக் கேட்டார்கள். அவர் ஆம் நிறைவேற்றுவேன் என்றார். அதே போன்று அவரது சார்பாக ஹஜ் செய்வாயாக என்றார்கள். ராவி:அப்துல்லாஹ் பின் ஜுபைர்(ரலி) (அஹ்மத் - நஸயி)  இந்த ஹதீஸ்கள் முழுவதும் கடமையாக்கப்பட்ட ஹஜ்ஜை செய்யாத நிலையில் இருப்பவர்கள், மரணித்துவிட்டவர்கள் இவர்கள் சார்பாக பிள்ளைகள் ஹஜ் செய்யலாம் என்பதை விளக்குகிறது. கடமையாக்கப்பட்ட ஹஜ்ஜுக்கே இந்நிலையாகும், உபரியாக மற்றவர்களுக்காக ஹஜ்-உம்ரா செய்யலாமா? என்பதை காண்போம். உபரியாக மற்றவர்களுக்காக ஹஜ்ஜோ-உம்ராவோ செய்வதற்கு எந்த ஹதீஸையும் நம்மால் காண முடியவில்லை. ஒருவருடைய நன்மை தீமையான சுமையையும் பிறர் சுமக்க முடியாது என்கிறான் இறைவன். பார்க்க, 6:164 , 34:18 , 17:15 ஆகிய வசனங்கள். அணுஅளவு நன்மை செய்தாலும்,அணுஅளவு தீமை செய்தாலும் யார் அதை செய்கிறாரோ அவரையே சாரும் என்கிறான் இறைவன். (அல்குர்ஆன் : 99 : 7,8) 

 பொதுவாக பிறருக்காக பாவ மன்னிப்பு கேட்க நமக்கு அனுமதியுண்டு. ஹஜ் உம்ரா செய்துவிட்டு அதன்மூலம் நாம் நாடியவர்களுக்கு பாவ மன்னிப்பு தேடலாம். இதை தவிர நாம் செய்யும் உம்ராவின் நன்மை அவர்களுக்கு போய் சேர்ந்துவிடும் என்று கூறுவதை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. 

 

14 கேள்வி: கணவன் தன் மனைவியுடனும், மனைவி தன் கணவனுடனும் நடந்துகொள்ளும் ஒழுங்குமுறைகளை கூறுவீர்களா?. எம்.ஏ.சி.அதாவுர்ரஹ்மான், ஆத்தலை, இலங்கை.  

கணவன் மனைவிக்குள் நிரந்தரமான, சுமூகமான, இனிமையான, சந்தோஷமான வாழ்க்கை அமைய இஸ்லாம் உணர்வு பூர்வமான வழிமுறைகளை காட்டிக்கொடுத்துள்ளது. தனி தொடராக எழுதக்கூடிய அளவிற்கு விஷயங்கள் உள்ளன. எல்லோருக்கும் பயன்படும் விதத்தில் சில நபிமொழிகளை கொடுக்கிறோம்.  கணவர்களுக்கு அறிவுரை  நல்ல குணமுடையவர்களே உங்களில் முழுமையான இறைநம்பிக்கை உடையவர்களாவீர்கள். தங்கள் மனைவியர்களிடம் சிறந்தவர்களாக நடப்பவர்களே உங்களில் சிறந்தவராவார் என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி)-திர்மிதி. எண்:1172)  பெண்களிடம் சிறந்த முறையில் நடந்துகொள்ளுங்கள். அவர்கள் உங்களிடம் அடைக்கலமாக உள்ளார்கள். இதைத் தவிர வேறு எதற்கும் நீங்கள் அவர்களிடம் உரிமைபெறவில்லை. தெளிவாக தெரியும்படி அவர்கள் ஏதாவது அருவருக்கத்தக்க காரியத்தை செய்தால் படுக்கையிலிருந்து அவர்களை விலக்குங்கள். காயம் ஏற்படாமல் அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு நடந்தால் அவர்கள் விஷயத்தில் நீங்கள் வேறுவழி தேடாதீர்கள். நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும். உங்கள் மனைவிமீது உங்களுக்கு உரிமை இருக்கிறது. அதேபோல் உங்கள்மீது உங்கள் மனைவிக்கு உரிமை இருக்கிறது என நபி(ஸல்)கூறினார்கள். (ராவி: அம்ருபின் அஹ்வஸ்(ரலி), முஸ்லிம்,திர்மிதி)  எங்கள் மனைவியருக்கு நாங்கள் செய்ய வேண்டிய கடமை என்ன? என்று ரசூல்(ஸல்) அவர்களிடம் கேட்டேன். நீ உண்ணும்போது அவளுக்கு உணவு கொடுக்க வேண்டும்,நீ உடுத்தும்போது அவளுக்கு உடை கொடுக்க வேண்டும்(அவள் ஏதாவது தவறு தவறு செய்தால்) முகத்தில் அடிக்கக்கூடாது வீட்டில் தவிற மற்ற இடங்களில் அவளை கண்டிக்கக்கூடாது இழிவானவார்த்தைகளால் அவளை ஏசக்கூடாது என்று நபி(ஸல்)கூறினார்கள். (ராவி: அபூ ஹுரைரா(ரலி), அபூ தாவூத்) ஒரு முஃமின் (மனைவியாகிய) முஃமினை வெறுத்துவிடவேண்டாம் அவளிடம் ஒரு குணம் பிடிக்காததாக அமைந்தாலும், மற்றொன்று நற்குணமாக விரும்பும் வகையில் அமைந்திருக்கும் என நபி(ஸல்)கூறினார்கள். (ராவி: அபூ ஹுரைரா(ரலி), முஸ்லிம்) இதே கருத்தை வலியுறுத்தி வந்துள்ள நபிமொழிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக கணவனுக்குறிய கடமைகளை ரத்தின சுருக்கமாக சொல்லிவிட்டன. இந்த ஹதீஸ்களில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் ஆழ்ந்த அறிவுறையை சொல்லக்கூடியதாகும்.   மனைவிகளுக்கு அறிவுரை:  மனைவியின் வருகைக்கு பின்பே ஒவ்வொரு ஆண்மகனின் போக்கே மாறும். வரக்கூடிய பெண் ஒழுக்கத்தின் சிகரமாகவும், நன்நடத்தையின் அஸ்திவாரமாகவும், இனிய குணங்களின் உறைவிடமாகவும் அமைந்து விட்டால் அவள் புகுந்த வீடு மிக சிறப்பான மாறுதலை பெறும் என்பதில் எவ்வித ஜயமும் இல்லை. வெளியுலகோடு அதிக தொடர்பு கொண்டுள்ள ஆண்மகன் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துவிட்டு வீட்டுக்கு வரும்போது அவனுக்குறிய ஒரே ஆறதல் அவனுடைய மனைவியாகத்தான் இருக்க முடியும்.  ;ஒருவனின் சாதனைகளும், சோதனைகளும் அவருடைய மனைவியே காரணம் ;; என்ற புதுமொழி மனைவியின் நிலையை வெளிப்படையாக கூறுகின்றன.  ;இவ்வுலகம் பாக்கியமாகும்!. உலக பாக்கியங்களில், மிக சிறந்தது நல்லொழுக்கமுள்ள மனைவி கிடைப்பதாகும்' என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு அம்ருப்னு ஆஸ் (ரலி),  ஆதாரம்: முஸ்லீம்.   'ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஸஜ்தா செய்ய அனுமதிப்பதாக இருந்தால் ஒரு பெண்ணை அவளது கணவனுக்கு ஸஜ்தா செய்ய சொல்லி இருப்பேன்( அதற்கு அனுமதியில்லை)'; என நபி (ஸல்) கூறினார்கள். ஆபூஹூரைரா (ரலி), ஆய்ஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) போன்ற பல்வேறு நபித்தோழர்கள் இக்கருத்தை அறிவிக்கிறார்கள். (திர்மிதி 1169).  'கணவன் திருப்தியுள்ள நிலையில் மனைவி மரணித்துவிட்டால், அவள் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாள்'  என நபி (ஸல்) கூறினார்கள்.அறிவிப்பாளர்: உம்மு ஸலமா (ரலி)திர்மிதி,ஹாக்கிம்;  'கணவன் தனது மனைவியை தன் தேவைக்காக அழைக்கும் போது அவள் அடுப்படியில் தம் கணவனிடம் செல்ல வேண்டும'; என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: தல்க் பின் அலி (ரலி), திர்மிதி 1170.  'தம் கணவனின் தேவையை மறுத்து, அவனை விட்டும் விலகிப் படுத்து, ஒருவள் தம் இரவைக் கழித்தால் அவளை மலக்குகள் சபிக்கிறார்கள்'; என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), புகாரி, முஸ்லிம்,நஸயி,திர்மிதி, இப்னுமாஜா.   கணவனின் தேவைகளை அறிந்து மனைவி நடந்துக் கெபள்ளவேண்டும் என்பதற்கு அறிவுப்பூர்வமான அறிவுரைகளாகும் இது. இல்லறம் சிறக்க இப்போதைக்கு இந்த போதனைகள் போதும் என்று கருதுகிறோம்.  

 

15 கேள்வி: ஒரு சுன்னத்தை விடுவதால் குற்றம் ஏற்;படுமா? முத்துப்பேட்டை. ஏ.அன்சாரி, கத்தார்.

வாழ்க்கைக்குத் தேவையான எல்லா அழகிய முன் மாதிரி சுன்னத்துகள் நபி(ஸல்) அவர்களிடம் இருப்பதாக அல்லாஹ்வே தெளிவு படுத்துகிறான். (அல் குர்ஆன் - 33:21) இந்தக் கடமைகளோடு சேர்த்து இந்த சுன்னத்துகளையும் பின் பற்றினால்தான் மார்க்கத்தை முழுமையாக நேசித்தவர்களாக, எடுத்துக் கொண்டவர்களாக ஆக முடியும். எந்த ஒரு நபி மொழியையும் அலட்சியப்போக்கால் விடுவதற்கு நமக்கு அனுமதியில்லை. சுன்னத்தை பின்பற்ற முடியாத சில நேரங்களில் அதை விட அனுமதியுண்டு. 'நான் எதையேனும் உங்களுக்கு கட்டளையிட்டால் உங்களால் இயன்ற வரை அதை பின்பற்றி செயல்படுங்கள், எதையேனும் நான் தடுத்தால் அதை விட்டு முற்றிலுமாக விலகி கொள்ளுங்கள்' என்பது நபி மொழி (அறிவிப்பாளர்: அபூ ஹீரைரா(ரலி) புகாரி, முஸ்லிம்);  

'இயன்ற வரை செயல் படுங்கள்'; என்ற நபி(ஸல்) அவர்களின் அனுமதி முடியாத சில சந்தர்ப்பங்களில் சுன்னத்தை விடலாம் என கூறுகிறது. தோழுகை போன்ற விஷயங்களில் சுன்னத்தை கடைபிடிக்கும் எல்லா வசதியும் இருந்தும் எவரேனும் மக்களுக்காக பயந்தோ அல்லது வேறு சில நொண்டிக் காரணங்களுக்காகவோ சுன்னத்தை வேணடுமென்றே விட்டால் அவர் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும். 

 

16 கேள்வி: சஹர்வுடைய நேரம் முடிந்த பிறகு நாம் தண்ணீர் குடிக்கலாமா? பவுஜியா,பரங்கிப்பேட்டை

சஹர் முடியும் நேரம் என்று ஒரு சிலரால் குறிப்பிட்ட நேரம் வரையறுக்கப்பட்டு அந்த நேரங்களையே ஒருசில ஜவுளிக்கடைகள் விளம்பர அட்டைகளில் பிரசுரித்துக் கொடுக்கிறார்கள். உண்மையிலேயே சஹர் முடியும் நேரத்திற்கும், இவர்கள் தொழுது கொண்ட நேரங்களுக்கும் மிகுந்த வேறுபாடுண்டு.  சுபுஹு தொழுகைக்கு பாங்கு சொல்லி முடியும்வரை சஹர் செய்ய ஹதீஸ்களில் ஆதாரம் உண்டு. சுபுஹு தொழுகைக்காக உம்மி மக்தூம் (ரலி) பாங்கு சொல்லும் வரை சஹர் உணவை உண்ண நபி (ஸல்) ஏவியுள்ளார்கள். உம்மி மக்தூம் (ரலி) (சுபுஹுக்காக) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் என்பது நபி மொழி . அறிவிப்பாளர்:ஆய்ஷா(ரலி), (புகாரி,முஸ்லிம்,நஸயி) நாங்கள் ஸஹர் செய்து விட்டு நபி(ஸல்) அவர்களுடன் தொழுகைக்கு கிளம்புவோம் என்று ஜைத் பின் தாபித் (ரலி) கூறினார்கள். (ஸஹர் முடிவதற்கும்,தொழுகைக்கும் இடைப்பட்ட நேரம் எவ்வளவு என்று கேட்டேன் அதற்கு ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), புகாரி  நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஸஹர் முடிந்து தொழுகை ஆரம்பமாக ஏறத்தாழ பத்து நிமிடங்களே இடைவெளி இருந்தன. நபியுடைய இந்த வழிமுறைக்கு முற்றிலும் மாற்றமாக இன்றைய நடைமுறையுள்ளது. ஸஹர் முடிந்து விட்டது என்ற அறிவிப்புக்குப்பின் 20,25 நிமிடங்கள் கழித்தே பாங்;கு சொல்லப்படுகிறது, அதன் பின் 15 நிமிடங்கள் கழித்து இகாமத் சொல்லப்படுகிறது. ஆக கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்திற்கு முன்பே ஸஹரை முடித்து கொள்ள வேண்டும்! என்று போலியான சட்டம் இயற்றி வைத்துள்ளார்கள். இந்த சட்டங்களை அலட்சியப் படுத்தி விட்டு பாங்கு சொல்லும் வரை உண்ணுவோம், பருகுவோம். 

 

17 கேள்வி: மனைவி கணவனுடைய பெயரை சொல்லலாமா? இதற்கு ஹதீஸில் தடையுண்டா?  ( எம்.எஸ்.கமாலுத்தீன், பெங்களூர், 79 ) 

கணவன் மனைவி இருவருக்கு மத்தியில் உள்ள தொடர்பு வெறும் உடல் ரீதியானது மட்டும் என்று இஸ்லாம் கூறவில்லை. அதற்கு மேலாக உள்ளத்தோடு தொடர்பு கொண்டவையாகும். நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுவதற்காக உங்கள் மனைவியை உங்களிலிருந்தே படைத்தான்... (அல்-குர்ஆன். : 30 : 21) கனவன் மனைவிக்குள் ஆறுதல் கிடைக்கும் எல்லா விஷயங்களையும் இந்த வசனம் அனுமதிக்கிறது. சொற்கள், செயல்கள், விளையாட்டு இவை கணவன் மனைவிக்குள் ஆறுதலையும் நெருக்கத்தையும் கொடுக்கும். மகிழ்ச்சியின் வெளிப்பாடாக ஒரு மனைவி தன் கணவனை பெயர் சொல்லியும் அழைக்கலாம். ; ;வாடா ; ;, ; ;போடா ; ; என்றும் செல்லமாகவும் கூறலாம். இஸ்லாம் இதையும் தடுக்கவில்லை. மனைவி மீது கணவனுக்கு இருக்கும் உரிமைப்போன்று மனைவிக்கும் உரிமை இருக்கிறது என்று கூறுகிறது இஸ்லாம். (பார்க்க, அல் குர்ஆன்: 2 : 228) பெயர் சொல்லி அழைக்கும் உரிமை உட்பட எல்லா உரிமைகளும் இதில் அடங்கும். 

 ஆயிஷாவே! நீ என்மீது சந்தோஷமாக இருக்கிறாயா..? அல்லது கோபமாக இருக்கிறாயா..? என்பதை நான் சாதாரணமாக அறிந்துகொள்வேன் என நபி(ஸல்) கூறினார்கள். எப்படி? என்று ஆயிஷா(ரலி) கேட்க, 'முஹம்மத் உடைய இறைவன்மீது சத்தியமாக' என்று நீ கூறினால், சந்தோஷமான இதயத்துடன் நீ இருக்கிறாய் என்பதை உணர்வேன். 'இப்ராஹீம் உடைய இறைவன் மீது சத்தியமாக' என்று நீ கூறினால் உன் உள்ளம் கோபத்தில் இருக்கிறது என்பதையும் நான் அறிவேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆய்ஷா(ரலி), புகாரி, முஸ்லிம்) 

 தம் கணவரை 'முஹம்மத்' என்ற பெயரால் அழைப்பதை நபி(ஸல்) சந்தோஷத்தோடு அனுமதிக்கிறார்கள். எனவே கணவனின் பெயரை மனைவி தாராளமாகச் சொல்லலாம். இன்று கூட, அரபு நாடு செல்பவர்கள் சாதாரணமாக இந்நிலையை காண்பார்கள். பெயர் சொல்லக்கூடாது என்ற மரபு அந்நிய சமயத்தின் காப்பியடிப்பாகும்.  

'இணை வைப்பவர்களுக்கு மாறு செய்யுங்கள்' என்பது நபிமொழி(புகாரி) 

 இந்த நபிமொழியையும் கருத்தில் கொண்டால் மனைவி தம் கணவனின் பெயர் சொல்லி அழைப்பது மிகவும் நியாயமானதே என்பதை விளங்கலாம். 

 

18 கேள்வி: பெண்கள் நோன்பு வைத்துக் கொண்டு குழந்தைக்குப் பால் கொடுக்கலாமா? தெரியாமல் கொடுத்தால் அதற்கு பரிகாரம் உண்டா?  ஷரீஃப் 

விளக்கம்: கர்ப்பமுற்ற பெண்ணும் குழந்தைக்குப் பாலூட்டுபவளும் நோன்பு நோற்பது சிரமமென்று கருதினால் அல்லது குழந்தையின் உடல்நலம் கெடும் என்று அஞ்சினால் நோன்பை விட்டு விடலாம். இந்நிலையை விட்டுக் கடந்த பிறகு நோன்பை நிறைவேற்றவேண்டும்.   எனவே நோன்பு நோற்பதால் உடல் நலத்திற்கு பிரச்சனை இல்லையெனில் நோன்பு நோற்று குழந்தைகளுக்கு பால் கொடுக்கலாம். 

 

19 கேள்வி: மாதவிலக்கு காலங்களில் பெண்கள் நோன்பு வைக்கலாமா? அப்படி தவறுதலாக நோன்பு வைத்து இருந்தால் அதற்கு பரிகாரம் உண்டா?  ஷரீஃப்

 மாதவிலக்கு மற்றும் பிரசவத்தீட்டு உள்ள பெண்கள் அக்காலங்களில் நோன்பு நோற்கக் கூடாது. அக்காலகட்டத்திற்குப் பின் அவர்கள் விடுபட்ட நோன்பை நிறைவேற்ற வேண்டும்.  மாதவிலக்கு மற்றும் பிரசவத்தீட்டு காலங்களில் நோற்கப்படுவது நோன்பாக ஆகாது. அது விடுபட்ட நோன்பாகவே கருதப்படும். 

 

20 கேள்வி: ஒளு செய்து விடடு மனைவியை தொட்டால் ஒளு முறியாத என்று சொன்னீர்கள். அதற்கு புகாரியில் உள்ளதாக கூறினீர்கள். எந்த பக்கத்தில் எந்த அத்தியாயம் என்பதை விளக்கவும். (இது என்னுடைய நன்பருக்காக கேட்கிறேன்) ஷரீஃப்

 விளக்கம்:' நபிகள் அவர்கள் தொழும் போது நான் என்னுடைய கால்களை அவர்களை நோக்கி நீட்டி இருப்பது வழக்கம். அவர்கள் ஸஜ்தா செய்யும் போது என்னைத் தொடுவார்கள், நான் கால்களை எடுத்து விடுவேன். திரும்ப அவர்கள் நிலைக்கு எழும்போது நான் திரும்ப எனது கால்களை நீட்டி வீடவேன்.' (புகாரி பாகம் 2: எண்: 300, அறிவிப்பாளர் ஆயிஷா (ரளி) 

 

21 கேள்வி:நபிமார்களை நாம் அலைஹி ஸலாம் என்று கூறுகிறோம். அதாவது இபுராஹிம் அலைஹி ஸலாம், ஈசா அலைஹி ஸலாம், மூசா அலைஹி ஸலாம், யூசுஃப் அலைஹி ஸலாம், யூனுஸ் அலைஹி ஸலாம்... என்று நாம் கூறுகிறோம். ஆனால் ஜிப்ரீல் என்பவர் ஒரு மலக்கு நாம் ஏன் அவர்களை ஜிப்ரீல் அலைஹி ஸலாம் என்று கூறுகிறோம்? விளக்கம் தரவும்.  நூருல்லாஹ்

 விளக்கம்: ஸல்லல்லாஹ- அலைஹி வஸல்லம் , அலைஹி ஸலாம், ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்பது எல்லாம் துவா (ஸலாம்) செய்வதாகும்.   ஜிப்ரீல் அலைஹி ஸலாம் அவர்கள் ஆயிஷா நாயகி அவர்களுக்கு ஸலாம் கூறியதாகவும், பதில் ஸலாம் ஆயிஷா நாயகி ஜிப்ரீல் அவர்களுக்கு கூறியதாகவும் ஹதீஸில் உள்ளது.   ஆயிஷா ரளி அவர்கள் நபி ஸல் அவர்கள் கூறியதாக கூறுகிறார்கள் 'ஆயிஷாவே! இது ஜிப்ரீல் ஆகும். அவர் உங்களுக்கு (வாழ்த்து) ஸலாம் கூறினார்' ஆயிஷா ரளி அவர்கள்; 'அவர்களுக்கு வாழ்த்துக்கள். அல்லாஹ்வுடைய ஆசியும், கருணையும்'அவர்கள் மீது உண்டாகட்டும்,' என்று கூறி நபி ஸல் அவர்களை நோக்கி சொன்னார்கள் ''நான் பார்க்காததை நீங்கள் பார்க்கின்றீர்கள்.' (பார்க்க: புகாரி : பாகம் 4: எண் 440 அறிவிப்பாளர் அபூஸலாமா)  சலாத்திற்கு நேரடியாக பதில் சொல்லும் போது 'அலைக்கும் வஸலாம்' என்று கூறுகிறோம். (அலைக்கும் என்பது 'உங்கள் மீது' என்பதாகும்). அதேபோல் மூன்றாம் நபருக்கு கூறும் போது 'அலைஹி ஸலாம்' என்று தான் கூறுவோம். (அலைஹி என்பது அவர்கள் மீது). இதிலிருந்து நாம் இது ஒரு வகையான துவா என்று அறியலாம். அதேபோல் ஸஹாபிகளைக் குறிப்பிடும்போது ரளியல்லாஹ- அன்ஹ- என்று கூறுகிறோம். (அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்).  இதை நாம் மாற்றிக் கூறுவதால் பிழை ஏதும் வந்து விடாது. பெரியோர்களால் முறைப்படுத்தப் பட்ட அதே வார்த்தைகளை நாம் பின்பற்றுவதனால் சில குழப்பங்களைத் தவிர்க்கலாம். 

 

22 கேள்வி: ரமளானின் இரவு நேரங்களில் மனைவியுடன் உறவு கொண்டுவிட்டு குளிக்காமல் ஸஹர் செய்யலாமா..? இரவு நேரத்தில் குளிப்பதற்கு கஷ்டப்படுவதால் பலர் மனைவியுடன் சேருவதில்லை. குளிக்க வேண்டும் - குளிக்கத் தேவையில்லை என்று இரு கருத்து நிலவுகிறது. எனவே இது சம்பந்தமான தெளிவு வேண்டும்.  அபுதாபியிலிருந்து சகோ:அப்துர்ரஹ்மான்.

விளக்கம்: மனைவியுடன் சேர்ந்தோ அல்லது தூக்கத்தில் விந்து வெளிபட்டாலோ குளிப்பு கடமையாகிறது. இந்த குளிப்புக்கடமை என்ற சட்டம் தொழுகைக்குறியதாகும். நோன்பிற்கோ இதர நல்ல காரியங்களுக்கோ குளிப்புக் கடமையானவர் குளிக்கவேண்டும் என்று இஸ்லாம் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.     'இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்கு தயாரானால் ..(ஒளு செய்து கொள்ள வேண்டும் என்ற சட்டத்தை இறைவன் இங்கு விளக்குகிறான்..அதை தொடர்ந்து..) நீங்கள் குளிப்புக் கடமையானவராக இருந்தால் குளித்து சுத்தமாகிக் கொள்ளுங்கள்..என்கிறான்'(பார்க்க,குர்ஆன்:5,6)     எனவே ரமளானில் மனைவியுடன் கூடி குளிப்புக் கடமையானால் அவரோ அவர் மனைவியோ ஸஹருக்கு முன் குளிக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.     'இறை நம்பிக்கையாளர்களே! நோன்பின் இரவுகளில் உங்கள் மனைவியுடன் நீங்கள் உடலுறவு கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது.................எனவே (விரும்பினால்) நீங்கள் அவர்களோடு உறவுக் கொண்டு அல்லாஹ் உங்களுக்கு விதித்திருப்பதை தேடிக் கொள்ளுங்கள்......... இன்னும் பஜ்ர் வரை உண்ணுங்கள் பருகுங்கள்.'|(பார்க்க குர்ஆன்:2:187)     இந்த வசனத்தில் உறவு கொள்வது-உண்ணுவது-பருகுவது எல்லாம் பஜ்ர் வரை நீடிக்கலாம் என்று அனுமதியளிக்கிறான் இறைவன். சிலர் சொல்வதுப் போல் உறவுக்குப் பின் குளித்து விட்டுதான் ஸஹர் செய்ய வேண்டும் என்பது சட்டம் என்றால் மூன்று காரியங்களும் பஜ்ர் வரை நீடிக்கலாம் என்று இறைவன் கூறமாட்டான். இந்த வசனத்iதை ஆழமாக சிந்தித்தால் குளிப்புக் கடமையான நிலையிலேயே ஸஹர் செய்யலாம் நோன்பை தொடரலாம் என்பதை விளங்கலாம்.     ஸஹருக்கு அடுத்து பஜ்ர் தொழுகை இருப்பதால் - தொழுகைக்கு குளிப்பு அவசியம் என்பதால்- கட்டாயம் குளிக்க வேண்டும். இது தொழுகைக்கான குளிப்புத்தானே தவிர நோன்புக்குறியதல்ல என்பதை கவனத்தில் வைக்க வேண்டும்.     நபி-ஸல்-அவர்களும் குளிப்புக் கடமையான நிலையில் ஸஹர் செய்து நோன்பை தொடர்ந்துள்ளார்கள். இதற்குறிய ஆதாரம் புகாரி-முஸ்லிம் உட்பட பல நூல்களில் இடம் பெற்றுள்ளது.  

 

23 கேள்வி: மன திருப்திக்காக நோன்பு நீய்யத்தை தமிழில் சொல்லிக் கொள்ளலாமா..? பெண்களை பின் பற்றி ஆண்கள் தொழலாமா..? கூடாது என்றால் தெளிவான விளக்கம் தாருங்கள். ஒளு செய்து விட்டு மனைவியை முத்தமிட்டால் ஒளு முறியுமா..?  ஷரீஃப்.  

விளக்கம்: ஹஜ்-உம்ராவிற்கு தவிர மற்ற அமல்களுக்கு நிய்யத் சொல்ல வேண்டும் அல்லது செய்ய வேண்டும் என்ற எந்த விதியும் மார்க்கத்தில் இல்லை. நிய்யத் என்றால் என்னவென்று விளங்காததால்தான் நாம் நியத்தை வாயால் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.எனவே முதலில் அதை விளங்குவோம்.    'இன்னமல் அஃமாலு பின்னிய்யத்'| என்பது நபிமொழி.(புகாரி)    எண்ணங்களின் அடிப்படையிலேயே செயல்கள் அமையும்-என்பது இதன் பொருள். நாம் எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் முதலில் அந்த செயல் நம் எண்ணத்தில் உதிக்க வேண்டும். தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தால்தான் நாம் தண்ணீர் குடிப்போம் இதுதான் நிய்யத் 'நான் இப்போது தண்ணீர் குடிக்கப்போகிறேன்' என்று யாரும் வாயால் சொல்லி விட்டு தண்ணீர் குடிப்பதில்லை.    குடிப்பது-நடப்பது-தூங்குவது-பார்ப்பது-என்று நமது ஒவ்வொரு செயலும் நிய்யத் அடிப்படையிலேயே அமைகின்றன. வணக்க வழிபாடுகளுக்கான நிய்யத்தின் நிலையும் இதுதான்.    தொழவேண்டும் என்ற எண்ணம் இருந்தால்தான் ஒளுசெய்ய முடியும் தொழுகைக்கு தயாராக முடியும். இப்படி தயாரான பிறகு மீண்டும் நிய்யத் செய்கிறேன் என்பது அறிவுக்குப் பொருந்தாத மார்க்கத்தில் இல்லாத காரியமாகும். நிய்யத் செய்கிறேன் என்று அரபியிலோ தமிழிலோ சில வார்த்தைகளை கூறுவது நபி வழிக்கு மாற்றமான கட்டாயம் விட்டுத் தொலைக்க வேண்டிய செயலாகும்.    மன திருப்திக்காக செய்யலாமா..? என்பதுதான் ஷைத்தானுக்கு இடம் கொடுக்கும் வாதமாகும். தெளிவான ஒரு காரியத்திற்கு எதிராக மன ஊசலாட்டங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது.    நோன்பை பொருத்தவரை பஜ்ருக்கு முன்னால் நோன்பு வைக்கவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட வேண்டும் என்று ஹதீஸ் வந்துள்ளது(திர்மிதி) எண்ணம் போல் வாழ்க்கை, எண்ணம் போல் அமல் அவ்வளவுதான்;.

------------------- --------------

   ஒளுவிற்கு பிறகு மனைவியை தொட்டாலோ முத்தமிட்டாலோ ஒளு போகாது ஏனெனில் தொழுகையின் போது நபி அவர்கள் தம் மனைவி ஆயிஷா ரலி அவர்களை தொட்ட விபரமும் அதே போல் ஆய்ஷா அவர்கள் தம் கணவர் நபி அவர்களை தொட்ட விபரமும் புகாரி உட்பட பல நூல்களில் இடம் பெற்றுள்ளது.

------------- -------------- 

   பெண்களை பின் பற்றி ஆண்கள் தொழுத ஒரு சம்பவமும் நபி-ஸல்- காலத்தில் நடக்கவில்லை. ஆண்களை பின் தொடர்ந்து ஏராளமான தொழுகைகளை பெண்கள் தொழுதுள்ளார்கள். இதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளது. பெண்களை பின்பற்றி ஆண்கள் தொழலாம் என்றால் அப்படி ஏதாவது ஒரு சம்பவம் இறைத்தூதர் காலத்தில் நடந்திருக்கும். அப்படி நடக்கவில்லை என்பதிலிருந்து அதை மார்க்கம் விரும்பவில்லை என்பதை விளங்கலாம்.

 

 தொடரும்.....

 

 

Welcome

Newest Members

ismailnajeeAkbar Mehaboob 

Google+ Web Search